ஞாயிறு மாலை. அந்த வணிகப் பேரங்காடி வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்கள் போல அங்கு மனிதர்கள் கூடியிருந்தனர். கண்ணன், தன் அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு அந்த அங்காடியின் இரண்டாவது தளத்தில் நடந்து கொண்டிருந்தான். அவன் பதினொன்றாம் வகுப்பு மாணவன். கண்ணனின் அம்மா ஆனந்தி ஒரு வங்கியில் காசாளராகப் பணி புரிகிறார்.
தாயும் மகனும் இரண்டாவது தளத்திலிருந்த அந்தத் துணிக்கடைக்குள் நுழைந்தனர். கண்ணனை அங்கிருந்த துணி வரிசைகளை விடவும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முகமில்லாத உருவ பொம்மைகளே மிகவும் ஈர்த்தன. ஒவ்வொரு பொம்மையின் அருகிலும் சென்று அந்த பொம்மை அணிந்திருக்கும் உடையின் நிறங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் எல்லா பொம்மைகளையும் பார்த்து, அவற்றின் உடை நிறங்களைச் சொல்லி முடித்த பின்னர் பொறுமையாகக் காத்திருந்த அம்மாவிடம் வந்தான்.
“என்ன கண்ணா, எல்லா பொம்மையோட டிரெஸ் கலரும் பார்த்தாச்சா? இனிமேலாவது உனக்கு டிரெஸ் எடுக்கப் போலாமா?”
“டிரெஸ் எடுக்கப் போலாமா”
”டிரெஸ் எடுக்கப் போகலாம் சொல்லு”
“டிரெஸ் எடுக்கப் போகலாம் சொல்லு”
“சரி வா” என்று அவனை அழைத்துக் கொன்டு அவன் வயதுக்குரிய உடைகள் அடுக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கிச் சென்றார் ஆனந்தி.
அவனுக்கு உரிய அளவிலான பல உடைகளை அணிவித்து சரி பார்த்து அதில் அவனுக்கு பொருத்தமான இரண்டினைத் தேர்ந்தெடுத்தார் ஆனந்தி. அவற்றை எடுத்துக் கொண்டு, பணம் செலுத்துமிடத்தில் உரிய தொகையைக் கொடுத்து வாங்கிக் கொண்டார். பிறகு மீண்டும் கண்ணனின் கையைப் பிடித்துக் கொண்டு கடையின் வாயிலுக்கு வந்தார். ஆனால் கண்ணனோ அம்மாவின் கையைப் பற்றி கடைக்குள் இழுத்தான்.
“ஏண்டா கண்ணா திரும்ப உள்ள போகணும்ன்ற? உனக்கான டிரெஸ்தான் எடுத்தாச்சே?”
மீண்டும் மீண்டும் அவரது கையை இழுத்தபடி, ”ம்ம்” என்ற ஒலியோடு உடை அணிந்து பார்க்கும் அறையை நோக்கிக் கையைக் காட்டினான் கண்ணன். பிறகுதான் ஆனந்திக்கு வழக்கமாய் அவனது முதுகில் மாட்டும் பையை அங்கேயே மறந்துவிட்டுவிட்டோம் என்பது புரிந்தது. அந்தப் பையில்தான் அதீதமான ஒலியைக் கேட்க நேர்ந்தால் அதிலிருந்து அவனைக் காக்கும் ஒலி குறைக்கும் காது மாட்டியும்(noise cancellation earmuff) , அதீத ஒளியிலிருந்து காக்க ஒரு கருப்புக் கண்ணாடியும் எப்போதும் இருக்கும்.
“அம்மா, பையை மறந்துட்டேன். போய் எடுக்கலாம் வாங்கன்னு சொல்லணும் கண்ணா. சும்மா ம்ம்னா எனக்கு என்ன புரியும்? எங்க சொல்லு – அம்மா பையை மறந்துட்டேன், போய் எடுக்கலாம் வாங்க”
”பையை மறந்துட்டேன், போய் எடுக்கலாம் வாங்க.”
உள்ளே சென்று அந்தப் பையை எடுத்து அவனது முதுகில் மாட்டிவிட்டு, வெளியே அழைத்து வந்தார் ஆனந்தி. அவர்கள் கீழிறங்கிச் செல்வதற்கான தானியங்கி படிக்கட்டுகளை நோக்கி நடக்கும்போது, ஆனந்தி தன் கல்லூரித் தோழி சந்திரா எதிரில் வருவதைப் பார்த்தார். சந்திரா தானா என்று லேசான சந்தேகத்தோடு பார்த்தவரை, அந்தப் பக்கமிருந்து உற்சாகமாய் அருகில் வந்து கைகளைப் பற்றிக் கொண்டு ”ஹாய் ஆனந்தி! எப்படிடீ இருக்க?” என்று கேட்டார் சந்திரா.
“ஹாய்டி. பாத்து எவ்வளவு வருஷம் ஆச்சு, நான் நல்லாருக்கேண்டி, நீ எப்படி இருக்க?”
“நானும் நல்லாருக்கேன். உனக்கு ஒரே பையன்தான் இல்ல? என்ன படிக்கிறான்?” என்றார் கண்ணனைப் பார்த்துக் கொண்டே.
இதற்குள் பேசிக் கொண்டே மூவரும் சற்று ஓரமாக வந்து நின்று கொண்டனர். ஓரமாக நிற்கிறோமே என்ற எண்ணத்தில் ஆனந்தி, கண்ணனின் கையை விட்டுவிட்டு, சந்திராவின் கேள்விக்கு பதில் சொன்னார்.
“ஆமா, இவன் மட்டும்தான். இப்ப ப்ளஸ் ஒன் போறான்.” என்றவரின் குரலில் உற்சாகம் குன்றியிருந்தது.
” ஓ! அப்படியா. என் பொண்ணு இந்த வருஷம்தான் இன்ஜினீயரிங்க் சேர்ந்திருக்கா.” என்றவர் சட்டென கண்ணனின் கையை இன்னொரு கையால் பற்றியபடி “நீ என்ன படிக்கப் போற?” என்றார்.
தன் கையை திடீரென ஒருவர் பற்றுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒரே உதறலில் அவரது கையிலிருந்து தன் கையை உருவிக்கொண்டே “தொடக் கூடாது” என்று மறுபுறம் திரும்பி நின்று சொன்னான் கண்ணன்.
அவனது இந்த எதிர்பாரா நடவடிக்கை சந்திராவின் உற்சாகத்தை வடியச்செய்துவிட்டது. அதே நேரம் இது போன்ற அசந்தர்ப்பங்களுக்குப் பழகிப் போயிருந்த ஆனந்தி தன் கைக்குள் இருந்த சந்திராவின் கையை இன்னமும் சற்று அழுத்தியபடி சொன்னார். “தப்பா எடுத்துக்காதே சந்திரா, அவனுக்கு ஆட்டிசக் குறைபாடு இருக்கு அவனால புது மனிதர்கள் தொடுவதை, தாங்கிக்க முடியாது. சொல்லப் போனா மனுஷங்க கூட்டமா இருக்கற இடங்களுக்கு வரதே அவனுக்கு கஷ்டம்தான். அதை மாத்தத்தான் அப்பப்ப இப்படி ஷாப்பிங், பீச்னு பொது இடங்களுக்கு கூட்டிட்டு வந்து மெது மெதுவா அவனையும் சமூகத்தோட கலந்து பழக வச்சிட்டிருக்கோம்.”
சந்திராவுக்கும் தர்ம சங்கடமாக இருந்தது. பேச்சை மாற்ற எண்ணி ஆனந்தியிடம் “பரவால்லடீ. சரி நீங்க வாங்க வேண்டியதெல்லாம் வாங்கியாச்சா?” என்றார்.
“ஆமா பையனுக்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வருது. அதான் ட்ரெஸ் வாங்கலாம்னு வந்தோம். வாங்கிட்டோம்”
” ஓ! இன்னைக்கே அவனுக்கு வாழ்த்து சொல்லிடறேன்!.. பிறந்த நாள் வாழ்த்துகள் கண்ணா..” என்று சொன்னார். கண்ணன் பதில் பேசாமல் எங்கோ பார்த்தபடி நின்றிருந்தான். ஆனந்தி பக்கம் திரும்பி, “எங்க உன் வீட்டுக்காரர், பின்னாடி வராறா?” என்று கேட்டார் சந்திரா.
“இல்லப்பா, அவர் வண்டிய சரிசெய்யக் கொடுத்திருந்தார். அதை வாங்க போயிருக்கார். சரின்னு நாங்க கிளம்பி வந்துட்டோம். இன்னிக்கு விட்டா அப்புறம் வார நாள்ல எங்க நேரமிருக்கும் சொல்லு?”
“ஆமா, அதும் சரிதான். நான் சும்மா சுத்திட்டுப் போகலாம்னுதான் வந்தேன், ஒன்னும் வாங்குற திட்டம்லாம் இல்ல. நீங்க டிரெஸ் வாங்கியாச்சுண்ணா… வாயேன், எங்காச்சும் போயி ஒரு காஃபி குடிக்கலாம்”
“சரிடி, நிச்சயம் போலாம். எப்படியும் கண்ணனுக்கும் எதாவது நொறுக்குத் தீனி வாங்கித் தரணும். அப்படியே நாமும் ஒரு காஃபி குடிப்போம்” என்றபடி திரும்பிய போதுதான் முதலில் நின்று கொண்டிருந்த இடத்தில் அவன் இல்லை என்பதை கவனித்தார். அதே நேரம் சந்திராவும் அதை உணர்ந்துவிட, இருவரும் பதற்றத்தோடு அவனைத் தேடத் தொடங்கினர்.
கண்ணனுக்கு அந்தப் பேரங்காடி ஓரளவு பழக்கமான இடம்தான். எப்போதும் ஒரே மாதிரியான ஒழுங்கு முறைகளையே பின்பற்றும் வழக்கம் உள்ள அவனால் திடீரென அம்மா இன்னொருவருடன் பேசுவதற்காக ஒதுங்கி நின்றதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தப் புதியவர் தன்னையும் தொட்டுப் பேச முயற்சி செய்யவே, அவனது மனம் குழம்பிப் போனது. அதனால் அம்மா உடன் வருகிறாரா என்பதை கவனிக்காமல் அங்கிருந்து விலகி, தானியங்கி படிக்கட்டு வழியாக முதல் தளத்திற்கும், பின்னர் தரைத்தளத்திற்கும் இறங்கிச் சென்றான்.
அங்கே வரும் ஒவ்வொரு முறையும் தரைத்தளத்தில் இருக்கும் ஒரு உணவகத்தில் ஆனந்தி அவனுக்கு சிற்றுண்டி வாங்கித் தருவார். எனவே நேராக அந்தக் கடைக்குச் சென்று வழக்கமாக அவர்கள் அமரும் மூலை மேசையில் அமர்ந்து கொண்டான். ஆனால் அந்தக் கடையின் வழக்கப்படி நாம்தான் சென்று உனவுப் பொருளுக்கு பணம் செலுத்தி விட்டு வர வேண்டும் என்பதோ, பிறகு நமக்கான எண்ணை அழைக்கும் போது நாம்தான் போய் உணவுப் பொருளை எடுத்து வர வேண்டும் என்பதோ அவனுக்குத் தெரியாது. தனக்காக, அம்மா எப்போதும் வாங்கித் தரும் எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்ட உருளைக்கிழங்கு துண்டுகளுக்காக அமைதியாகக் காத்திருக்கத் தொடங்கினான் கண்ணன்.
அப்போது ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவொன்று உற்சாகமாக உணவகத்தின் உள்நுழைந்தது. அவர்களில் உயரமாக இருந்த ஒரு பையன் கடையின் பொறுப்பாளரிடம் சென்று அவர்கள் அனைவருக்கும் தேவையான உணவுப் பொருட்களைச் சொல்லி, பணம் செலுத்தினான். அப்படியே அங்கே ஒலித்துக் கொண்டிருந்த மென்மையான பாடலுக்கு பதிலாக வேறொரு புதிய பாடல் ஒன்றினைக் குறிப்பிட்டு அதனை ஒலிபரப்பச் சொல்லிவிட்டு, நண்பர்களோடு சென்று சேர்ந்து கொண்டான். கடை பொறுப்பாளரும் உணவுப் பட்டியலை உள்ளே தந்துவிட்டு வந்து அவர்கள் சொன்ன பாட்டை ஒலிக்கச் செய்தார்.
வேகமான தாள நடை கொண்ட அந்தப் பாடல் கண்ணனுக்கு பதட்டத்தை அளித்தது. இந்தப் பாட்டு வேணாம் என்று அம்மாவிடம் சொல்லலாம் என்று பார்த்தால் அம்மாவை அங்கே காணவில்லை என்பது அவனது பதற்றத்தை அதிகரித்தது.
அதற்குள் அந்த இளைஞர் குழுவினர் அவன் அமர்ந்திருந்த மேசைக்கு அடுத்த மேசையில் வந்து அமர்ந்தனர். அவர்களுக்கு நாற்காலி தேவைப்பட்டபோது கண்ணன் அமர்ந்திருந்த மேசையிலிருந்து இரு நாற்காலிகளை இழுத்து, தங்கள் பக்கம் திருப்பிப் போட்டுக் கொண்டனர். தரையில் அந்த நாற்காலியின் கால்கள் இழுபட்டதில் எழுந்த ஒலி, கண்ணனின் காதில் நாராசமாக ஒலித்தது. பற்கள் கூசுமளவுக்கான அந்த ஒலி அவனை இன்னமும் அதிக அவதிக்குள்ளாக்கியது.
அந்தக் குழுவிலிருந்த கண்ணாடி அணிந்த ஒரு இளைஞன், கடை பொறுப்பாளரிடம் பாடலின் ஒலியைக் கூட்டும்படி சொன்னார். உடனே அவர் அதனை செய்தார். மீண்டும் அதே இளைஞன் இன்னொரு தரமும் ஒலியைக் கூட்டுமாறு சொல்ல, இப்போது மிகவும் உரத்த ஒலியில் அந்தப் பாடல் முழங்கியது. ஏற்கனவே அதுமிகவும் துள்ளலான தாளக்கட்டு உள்ள பாடல் என்பதால் உரத்த ஒலியமைப்பில் அங்கிருந்த வேறு சிலரையும் அது தொந்திரவுக்கு ஆளாக்கியது.
கண்ணனால் அந்த ஒலியையும், அதிர்வுகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தன் காதுகளைக் கையால் மூடிக் கொண்டு, “சத்தம் கம்மி பண்ணு” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான்.
முதலில் பாடலின் உரத்த சப்தத்தில் அவன் சொன்னது யார் காதிலும் விழவில்லை. மெல்ல மெல்ல அவனும் தன் குரலை உயர்த்திக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் அனைவரும் அவனை கவனிக்கத் தொடங்கினர். அதற்குள் அவன் உணர்ச்சி வசப்பட்டு அழவும் ஆரம்பித்திருந்தான். ஒரு பதின் பருவத்து இளைஞன் பொது இடத்தில் அழுவதும், வினோதமாக நடந்து கொள்வதும் அனைவரின் கவனத்தையும் இழுக்கத் தொடங்கியது.
அந்த இளைஞர் குழுவுக்கோ இது மிகவும் வேடிக்கையாகத் தெரிந்தது. அதில் ஒருவன் தன் கைபேசியை வெளியில் எடுத்து, அதில் கண்ணனின் நடவடிக்கையை ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினான். மற்ற நால்வரும் அவனைப் பார்த்து சிரிப்பதும், தங்களுக்குள் அவனைப் பற்றி கேலியாகப் பேசிக் கொள்வதுமாக இருந்தனர்.
அதே உணவகத்தின் இன்னொரு மூலையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் இந்த கலாட்டாவினால் எரிச்சல் அடைந்தனர். அப்பா ராஜேஷும் அம்மா பிரியாவும் மென்பொருள் துறை ஊழியர்கள். ஒரே மகன் பிரத்யுனுக்கு மிகவும் பிடித்த கடை என்பதால் அங்கு வந்திருந்தனர்.
“என்னங்க இந்தக் கடைல இன்னைக்கு ஒரே இரைச்சலா இருக்கு? பேசாம ஆர்டர் பண்ணினதை பார்சலா வாங்குங்க, வெளில போய் உக்காந்து நிம்மதியா சாப்பிடலாம்.”
“இரு, அவசரப் படாதே. இருக்கற எல்லாரையும் தொல்லை பண்ணுற அளவுக்கும், அந்தப் பசங்களுக்கு ஏத்தா மாதிரியும் சூழலை மாத்தறது தப்புல்ல? கடைக்கார தம்பிகிட்ட நான் பேசிப்பாக்கறேன்”
அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருக்க, பிரத்யுன் முதலில் வாங்கியிருந்த பழச்சாற்றை பருகுவதில் மும்முரமாய் இருந்தான். திடீரென கண்ணனின் அழுகுரல் கேட்கவே, சுவற்றினைப் பார்த்த இருக்கையில் அமர்ந்திருந்த அவன் திரும்பிப் பார்த்தான். சூழலை ஒரு நொடியில் புரிந்து கொண்டவன் சட்டென தனது இருக்கையிலிருந்து எழுந்து அந்த கும்பலை நோக்கிச் சென்றான்.
”டேய், நீ எதுக்குடா அங்க போற, நமக்கு எதுக்கு வம்பு? என்னங்க அவனை நிறுத்துங்க” என்று பிரியா பதட்டமானார்.
ராஜேஷ் அவரைத் தோளில் தட்டி அமைதிப்படுத்திவிட்டு, அவரும் மகனுக்கு ஆதரவாக பின்னால் சென்று நின்று கொண்டார். அப்போதுதான் அங்கே பாதிக்கப்பட்டிருக்கும் நபர் தன் மகனின் வகுப்புத் தோழன் கண்ணன் என்பதை உணர்ந்தார்.
“எக்ஸ்கியூஸ் மீ, எதுக்காக இப்படி அநாகரீகமா நடந்துக்கறீங்க? மொதல்ல வீடியோ எடுக்கறத நிறுத்துங்க அவன வீடியோ எடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” பிரத்யுன் நிதானமான, அதே நேரம் உறுதியான குரலில் கேள்வியை எழுப்பினான்.
“பொது இடத்துல இப்படி காமெடியாவும், மோசமாவும் நடந்துகிட்டா நாங்க அதை வீடியோ எடுக்குறதுல என்ன தப்பு? எதுக்கு நீ இப்படி கிடந்து குதிக்கற?” என்று வீடியோ எடுத்த இளைஞன் எகிற, அவன் நண்பர்கள் அவனுக்கு துணைக்கு வந்தனர்.
“நீ யாருடா பெரிசா பஞ்சாயத்துக்கு வந்துட்ட? எங்களுக்கு எப்படி நடக்கணும்னு சொல்லித்தர நீ யாரு?”
“இதென்ன உன் கடையா? இல்ல இந்த மாலே உங்க அப்பா தாத்தா சொத்தா?”
ராஜேஷ் தான் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டதென பேச ஆரம்பித்தார்.
“தம்பிங்களா, அதே மாதிரி இந்தக் கடையோ, மாலோ உங்களுக்கும் சொந்தம் இல்லதானே? மொதல்ல நீங்க பாட்டுச் சத்தத்த இவ்வளவு ஏத்த சொன்னதே தப்பு. பத்தாததுக்கு அந்த சத்தத்தால் இப்படி கஷ்டப்பட்டுக் கிட்டிருக்கற பையன வீடியோ எடுக்கறீங்க; கேலி பண்றீங்க… இதெல்லாம்தான் உண்மைல ரொம்ப அநாகரீகமான நடத்தை”
வீடியோ எடுக்காதே என்ற பிரத்யுனுக்கு ஆதரவாக அவன் அப்பா வந்ததும் அரைமனதாகவேனும் வீடியோ எடுப்பதை அந்த இளைஞன் நிறுத்தினான்.
இதற்குள்ளாக பிரத்யுன் கண்ணனின் அருகில் சென்றான். அவன் முதுகில் மாட்டியிருக்கும் பையில் ஒலியைக் குறைக்கும் காது மாட்டி ஒன்று எப்போதும் இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். கண்ணனின் தோளோடு அணைத்துக் கொண்டு “ஒன்னுமில்ல கண்ணன். ஒன்னுமில்ல. ரிலாக்ஸ்” என்று பேசியவாறே அவனது முதுகுப் பையை பிரித்து, அந்த காது மாட்டியை எடுத்து அவனுக்கு அணிவித்தான். பிரத்யுனை அந்த இடத்தில் பார்த்த கண்ணனின் கண்களில் ஒரு சின்ன வெளிச்சம் பரவியது. கைகளைக் காதிலிருந்து எடுத்துவிட்டாலும் குறுகி அமர்ந்தவன் நிமிரவே இல்லை.
மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஈரம் ஒற்றும் தாள்களை எடுத்து கண்ணனின் கண்களையும், மூக்கையும் துடைத்து விட்டான் பிரத்யுன். இன்னமும் “சத்தம் கம்மி பண்ணூ” என்று விசும்பியபடியே சொல்லிக் கொண்டிருந்தான் கண்ணன்.
அதற்குள் ராஜேஷ் கடை பொறுப்பாளரை நோக்கித் திரும்பி பேச ஆரம்பித்தார்.
“ஏன்பா, ஒரு வாடிக்கையாளர சந்தோஷப்படுத்தறதுக்காக இவ்வளவு உரத்த சத்தத்துல பாட்டு போடலாமா? நிர்வாகத்துகிட்ட இது பத்தி புகார் பண்ணவா?”
”சாரி சார்” என்றபடியே பாட்டை நிறுத்தினார் பொறுப்பாளர்.
இப்போது கண்ணனின் அழுகை அடங்கியிருந்தது. பிரியாவும் தன்னிடத்திலிருந்து எழுந்து வந்து, கண்ணனின் அருகில் சென்று நின்றுகொண்டு, அவனை தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தார். பிரத்யுன், பிரியாவின் இருவரின் அருகமைவும் கண்ணனைக் கொஞ்சம் கொஞ்சமாக அமைதிப்படுத்தியது.
பிரத்யுன், அந்த இளைஞர்களைப் பார்த்து, “இவன் பேர் கண்ணன். இவன் என்கூடத்தான் படிக்கறான். இவனுக்கு ஆட்டிசம்னு சொல்லப்படற குறைபாடு இருக்கு. இவங்களுக்கு கண்ணு, காது, மூக்கு, தோல்னு புலனுறுப்புகள் எல்லாம் நம்மைவிடவும் ரொம்ப நுட்பமா வேலை செய்யும். இவனுக்கு அதிக சத்தம் ஆகாது.
வேறு சிலருக்கு தொட்டால் பிடிக்காது. இன்னும் சிலருக்கு அதிகப்படியான வெளிச்சம் ஆகாது. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சிக்கல் இருக்கும். ஆனா இவங்களும் நம்மள மாதிரியான மனுஷங்கதான். வேறுபட்ட நடத்தை இருந்தாலும் எந்த வகையிலும் அவங்கள மட்டமா நடத்தவோ கிண்டல் செய்யவோ கூடாதுன்னு சட்டமே சொல்லுது. நாம பாக்குற அதே உலகத்தை அவங்க கொஞ்சம் வேற விதமா பாக்குறாங்க, அவ்வளவுதானே தவிர அவங்க நமக்கான வேடிக்கை பொருள் இல்ல.” என்று சொன்னான்.
அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, சட்டென நினைவு வந்தவராக பிரியா தனது செல்பேசியை எடுத்து அதில் கண்ணனின் அம்மா எண்ணைத் தேடி எடுத்து அழைத்து தாங்கள் இருக்குமிடத்தைச் சொன்னார்.
வீடியோ எடுக்க முயற்சித்த இளைஞனின் தலை தாழ்ந்தது. மிக மெதுவாக “சாரி” என்று முணுமுணுத்தான். மற்ற இளைஞர்களின் முகத்தில் இருந்த கிண்டலான பார்வையும் இப்போது மாறியிருந்தது. அனைவரும் சங்கடமான மௌனத்தில் இருந்தனர்.
“கண்ணன் ரொம்ப அருமையா பாடுவான். நீங்க அவன வீடியோ எடுக்கணும்னு விரும்பினால், அவன் முழுசா சமாதானம் ஆனபிறகு அவனை நான் பாட சொல்லி கேக்கறேன். அவன் பாடினா, அதை வேணும்னா வீடியோ எடுங்க. ஒருத்தரோட திறமைய பரப்பறதுக்குத்தான் நமக்கு உரிமை இருக்கே தவிர, யாரையும் அவமானப்படுத்த யாருக்கும் உரிமை இல்ல” என்றார் ராஜேஷ்.
அப்போதுதான் கடையருகே வந்த ஆனந்தி, கண்ணனின் இருபுறமும் நின்றிருந்த பிரியாவையும் பிரத்யுன்னையும் பார்த்து கையை அசைத்துக் கொண்டே நெருங்கி வந்தார். அவருடன் வந்த சந்திராவும் கண்ணனைக் கண்டதும் நிம்மதியானார்.
அம்மாவைப் பார்த்தும் வேகமாய்ச் சென்று அவரைக் கட்டிக்கொண்டு, ”அம்மா, சத்தம் கம்மி பண்ணு” என்றான் கண்ணன்.
“உனக்குப் பிடிக்காத பாட்டைத்தான் நிறுத்தியாச்சே, தம்பி. இனி உனக்கு பிடிச்ச பாட்டா நீ பாடு. நாங்க எல்லாரும் ரசிக்கத் தயாரா இருக்கோம்” இது வீடியோ எடுக்க முயற்சித்த அதே இளைஞனின் குரல்தான் என்பதை வியப்புடன் பார்த்தான் பிரத்யுன்.
இப்போது அந்த பேரங்காடியின் ஒலியும், ஒளியும் கண்ணனுக்கு ஏற்றபடி மென்மையானதாக, அரவணைப்பதாக மாறியிருந்தது.
+++
20.11.2025 – ஆனந்த விகடனில் வெளிவந்த கதை