ஞாயிறு விடுமுறை தினம் போலவே தோன்றவில்லை. அன்று தான் அனைத்துக் குழுக்களும் முழு உத்வேகத்துடன் இயங்குகின்றன. போற போக்கைப் பார்த்தால், ஒரு ஞாயிறு பத்தாது போல. மாதத்தின் முதல் ஞாயிறாதலால், சவுல் ஏரியில் பறவை காணல். எப்போதாவது தான் பறவை காணலுக்குச் செல்வதால், இன்று சென்றே தீர வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால் முன்தினம் உறங்க வெகுநேரம் எடுத்ததால், காலையில் சுறுசுறுப்புடன் எழு முடியவில்லை. இருப்பினும் பறவை காணலுக்கு சரியான நேரத்திற்கு சென்று சற்று முன்னதாகவே திரும்பினேன். இன்று புதிதாக எந்த ஒரு பறவையும் தரிசனம் தரவில்லை. ஆனாலும் பறவைகளைப் பார்ப்பதில் எப்போதுமே ஓர் ஆனந்தம் தான். வீடு திரும்பியவுடன் ப்ரட்டில் பீட்சா செய்து காலை சிற்றுண்டி. பின்னர் குழந்தைகளை ஓவியப் பயிற்சி வகுப்புக்கு அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. இன்று தேசிய அறிவியில் தினத்தை ஒட்டி இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் பொதுமக்களுக்கான கண்காட்சி; அதற்கு நானும் மகள்களும் சென்றோம். பிரமிக்க வைக்கும் செய்திகள்; எங்களுக்கு அந்தளவுக்கு புரியவில்லை. ஆனால் மாலைப் பொழுது இனிதாகவே அங்கு கழிந்தது. அதன் பின்னர் தமிழ்நாட்டின் பல்லுயிரியம் வெப்பினர். இந்த வாரம் திருச்சி மாவட்டத்தைப் பற்றி திரு.பால பாரதி அவர்கள் பேசியது சிறப்பாக இருந்தது. காக்கைக் கூடு அமைப்பினர் முன்னெடுக்கும் இந்த பல்லுயிரிகளின் வெப்பினரில் வாரம் ஒரு மாவட்டமாக தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களும் 38 வாரங்களில். இன்றுடன் மூன்று வாரங்கள் நிறைவடைந்திருக்கின்றன. அவ்வப்போது கிடைத்த நேரத்தில் வாசித்து இந்திரா சௌந்திரராஜன் அவர்களின் ‘சிதம்பர ரகசியம்’ புத்தகத்தைத் தற்போது தான் வாசித்து முடித்தேன். அப்படியே ஒரு பதிவை எழுதி விடலாமென்று தற்போது மடிக்கணிணியின் முன்னே… மிக்க மகிழ்ச்சி!
நேற்று நடந்தவை
புது வருடத்தில் என்னைப் புதுப்பிப்பதற்காக ஸ்ட்ராவா ஜனவரி மாத 50கிமீ சவாலில் சேர்ந்திருந்தேன். நேற்று முன்தினம் வரை 40கிமீ நடந்திருந்தேன். சரி, அடுத்த மாதம் இந்த சவாலை பார்த்துக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் காலையில் சற்று முன்னதாகவே எழுந்ததால் ஒரு எட்டு போய்ட்டு வரலாம் என 3கிமீட்டரோடு முடித்து கொண்டேன். மதிய உணவுக்கு பின் 2கிமீ நடந்து கொடுக்கிறேன் சில நாட்களாக; வழக்கமாகி விட்டதால் நேற்றும் நடந்தேன். மாலையும் கொஞ்ச நேரம் கிடைத்ததால் ஏன் இந்த சவாலை முடிக்கக் கூடாதென ஒரு மணி நேரம் 5கிமீ நடந்தேன். இவ்வாறாக எதிர்பாராத விதமாக காலை, மதியம், மாலை என 10கிமீ நடையாய் நடந்து சவாலை முடித்தது, நிறைவு.

ஆலப்புழா
மனைவியின் சகோதரரின் நண்பரின் அக்காவின் மகனது திருமணம் ஆலப்புழாவில்; அவ்விழாவைச் சிறப்பிக்க பெங்களூருவிலிருந்து கொச்சுவேலி விரைவு வண்டியில் ஆலப்புழாவிற்கு கடந்த திங்கள் மாலை பயணம். ரயில் நிலையத்திலிருந்து எங்களை அழைத்துச் செல்ல அதிகாலையிலேயே ஆட்டோ அனுப்பியதில் ஆரம்பித்த அவர்களது அன்பான உபசரிப்பு ஆலப்புழாவிலிருந்து நகரும் வரை குறையவில்லை. பொங்கலன்று காலை சிற்றுண்டி குழாப்புட்டும் கடலைக் கறியும்; குடும்பத்தினருக்கு அவை உணவுக்குழலுக்குள் இறங்க மறுத்தது. பின்னே ஷிக்காரா படகில் குடும்பத்துடன் உப்பங்கழியில் ஓர் உலா. வழங்கப்பட்ட அறிவுரை ஆலப்புழாவிலிருந்து நெடுமுடிக்கு அரசு படகில் நீர்வழி பயணம், பின்னர் நெடுமுடியிலிருந்து ஆலப்புழாவிற்கு சாலை வழி பயணம்; நமக்கு தான் அறிவுரைகள் உரைப்பதில்லையே. மதியம் ஏரிக்கரையோர உணவகத்தில் மீன் சாப்பாடு, நண்டு வறுவல், ஒரு முழு விரால் மீன் வறுவல்; கேரள அரிசி யாருக்கும் ஒப்பவில்லை; உப்பும் காரமும் வேறு காணோம். திருமணம் நிகழும் இடத்துக்கு அருகில் தங்கிய விடுதி சரி வராததால், இணையத்தில் தேடி ஓமணப்புழாவில் ஒரு கடற்கரையோர தங்கும் விடுதியைப் பிடித்தோம். மாலையில் சிறு திருமணத்திற்கு முன்தின நிகழ்வு மற்றும் நண்பரின் குழந்தையின் பிறந்தநாள் விழா. மாட்டுப் பொங்கல் காலை ஓமணப்புழா கடற்கரையில் விடிந்தது; பேரலைகள். குழந்தைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தேவாலயத்தில் எளிமையாக திருமணம் நடந்தேறியது; பின்னே வீட்டில் வரவேற்பும் மதிய உணவும். கேரள நாட்டின் கல்யாண சாப்பாடு. மாலை ஆலப்புழா கலங்கரை விளக்கத்தில் ஏறி ஊரின் அழகை ரசித்தோம். பின்னே கடற்கரையில் இருந்த மீன்கள் காட்சியகத்துக்குள் நுழைந்தோம்; உள்ளே கடற்கன்னியும் பல்வேறு மீன்களும். வெளியே ஊட்டி மிளகாய் பஜ்ஜி மற்றும் கோபி 65. காணும் பொங்கலன்று ஊரை சுற்றி பார்க்க ஒரு ஆட்டோவை அமர்த்தினோம். முதலில் குழந்தைகளுக்காக ஆனை சவாரி; களிறுக்கு அடுத்ததாக கயிறு அருங்காட்சியகம்(உள்ளே அனைத்தும் கயிற்றால் உருவாக்கப்பட்டவை); மதிய உணவுக்கு பின் பதிராமணல் தீவைப் பார்வையிட்டோம்(குறுக்கும் மறுக்கும் ஓடிய உடும்புகள் எங்களை வரவேற்றன; மர வீடும் அருமை; பூங்காவில் ஆடும் போது இளையவள் விழுந்ததால் அங்கிருந்து விரைவிலேயே நகர்ந்து விட்டோம்); மராரிகுளம் கடற்கரையில் கொஞ்சம் காற்று வாங்கி விட்டு நண்பர் வீட்டுக்கு செல்ல நேரம் இல்லாததால் நேராக பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தோம். இவ்வாறாக இவ்வருட முதல் வெளியூர் பயணமும், பொங்கலும் ஆலப்புழாவில் கழிந்தது. அடிபொலி!

2025
முதல் பதிவு எழுதுவதற்கே முப்பது நாட்கள் ஆகி விடும் போல. இன்று, நாளை, என்று ஒரு வாரம் ஓடி விட்டது. 2024-ஐப் பற்றி கடைசி சில பதிவுகளில் எழுதியாயிற்று. புத்தாண்டுக்கு என சிறப்பான தீர்மானங்கள் எதுவும் எடுக்கவில்லை; கடந்த ஆண்டை விட எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே என் அவா. இந்த ஒரு வாரத்தில் ஓடுபொறியை தூசி தட்டியாயிற்று, நடைப் பயிற்சி மீண்டும் தொடங்கப்பட்டது, நான் தான் ஔரங்கஸேப் புத்தகம் வாசிப்பில்… முதல் வார பவர் ப்ளே போலவே இனிய ஆண்டாக 2025 அமையட்டும்!
வாசித்தல்
வாசித்தல் சுவாசித்தலைப் போல் ஒன்றிப் போன வருடம், 2024. சிறு விபத்தால் ஓய்வெடுத்திருந்த சில நாட்களைத் தவிர மற்ற எல்லா நாட்களும் வாசித்திருக்கின்றேன். தினமும் ஒன்றிரண்டு பக்கங்களாக வாசித்து கிட்டதட்ட 5000 பக்கங்களை 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களில் வாசித்திருக்கின்றேன். 2024-ன் துவக்கத்தில் வாசித்த சில நாவல்கள் நினைவில் இல்லை. இனி புத்தகத்தை வாசித்தவுடன் சிறு குறிப்பாவது எழுதி வைக்க வேண்டும். நினைவில் நின்றவை – The feast of the goat, பூனாச்சி, வேள்வித்தீ, கம்பா நதி, பொண்டாட்டி,One Indian Girl, உப்பு வேலி, மரப்பசு… 2025-ல் வாசிப்பு இன்னும் வளரட்டும்!


மறையூர்
திட்டமிடலுக்கு குறைவான அவகாசம் எடுக்கும் பயணங்களே சாத்தியமாகின்றன. வருட கடைசி வாரம் சென்ற மறையூர் பயணமும் அதிலடக்கம். ஒன்றிரண்டாக ஒன்பது பேர் வரை சேர்த்து கடைசியில் ஏழு பேர் சென்றோம். உடுமலையில் வியாழன் காலை சந்தித்து அங்கிருந்து மறையூர். தங்குமிடம் சேர மதியம் ஆகி விட்டது. தேதி குளறுபடியால் முதல் நாள் அருகில் இருந்த விடுதியில் தங்க வேண்டியதாயிற்று. மாலை விடுதிக்கு பின்னே விழுந்து ஓடிக் கொண்டிருந்த கரிமுட்டி சிற்றருவியில் ஒரு குட்டி குளியல். இரவில் தீ வளர்த்து அதில் குளிர் காய்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்; அரட்டை முடிந்து உறங்க நள்ளிரவு ஆகி விட்டது. இரண்டாம் நாள் ஜீப் சவாரியில் தேயிலை, கனித் தோட்டங்கள் ஒரு பார்வை, இரவிக்குளம் லக்கம் அருவி, ப்ரம்மரம் திரைப்படம் எடுத்த இடம், கரடு முரடான பாதை கொண்ட குன்றில் ஏற்றம்/இறக்கம்… Don’s River Valley Jungle Resort-ல் தங்கியிருந்தோம். சிறப்பான உபசரிப்பு. குடும்பத்துடன் சென்று வரவும் பரிந்துரைப்பேன். மகிழ்ச்சி!

2024 செயற்பாடுகள்
ஸ்ட்ராவா செயலியில் இவ்வருடத்தைய செயற்பாடுகள் Year In Sport என புட்டு புட்டு வைக்கப்பட்டுள்ளது. 2024-ல் ஒரே மகிழ்ச்சி தரும் விஷயம், இதை இலக்காக வைக்கும் பட்சத்தில் எளிதில் அடுத்த வருடம் அதைத் தாண்டி விட முடியும் என்பது தான் 😒. நடைப் பயற்சியே பெரும்பான்மை இடத்தை பிடித்திருக்கிறது. Tour de 100-ல் பதிவு செய்ததோடு சரி; ஒருநாள் கூட மிதிவண்டியை எடுக்கவில்லை. எழுதுவதற்கு எதுவும் இல்லை; படங்கள் பேசட்டும். 2025 சிறக்கட்டும்.



பறவை காணல் 2024
2024-ல் பறவை காணல் பழக்கம் காணாமலே போய் விட்டது. இருமுறை சவுல் ஏரிக்கு சென்றதும், குடகு மலை மற்றும் மரையூர் பயணத்தின் போது சென்ற காலை நடையும் மட்டுமே இவ்வருடத்தின் பறவை காணல் எச்சங்கள். ஒரே ஒரு Lifer-உடன் வெறும் 70 பறவைகளை மட்டுமே 2024-ல் கண்டிருக்கின்றேன். கடந்த நான்கு ஆண்டுகளில் இவ்வருடம் மிக குறைவான பறவை காணல்களையும் பறவைகளையும் ebird-ல் பதிவு செய்திருக்கின்றேன். வரும் வருடம் மீண்டும் பறவை காணலில் சிறகை விரிக்க ஆசை; பார்ப்போம் பறப்பேனா? என்று.

ஓர் இந்திய பெண்
அமேசான் பிரைம் சந்தாவுடன் இலவச இணைப்பாக மின்புத்தகங்களையும் கிண்டிலில் வாசிக்கலாம். அத்தகைய புத்தகங்களுக்கு மேல் prime என்று குறிக்கப்பட்டிருக்கும். பிரைம் வாசிப்பில் முதன்முதலாக எடுத்த புத்தகம் Moby Dick; இன்னும் முடிந்தபாடில்லை. 50 Greatest Short Stories புத்தகமும் நகரவில்லை. கடைசியாக வாசிக்க எடுத்தது, சேத்தன் பகத்தின் One Indian Girl. ஒரு வழியாக Prime Reading-ல் வாசித்து முடித்த புத்தகம். ராதிகாவின் திருமண நிகழ்ச்சிகளில் துவங்கி சற்று பின்னேயும் முன்னேயுமாக நகர்கிறது. கோவாவில் அவளது திருமணம் நினைத்த படி நடந்ததா என்பதே ஓர் இந்திய பெண்ணின் கதை. கதை நெடுக ராதிகாவின் மனதின் குரலாக(mini-me) சாய்வெழுத்துகளில் எழுதப்பட்டுள்ள வரிகள் நிமிர்ந்து நினைவில் நிற்கின்றன. விறுவிறுப்பான பொழுதுபோக்கு நாவல். அடுத்ததாக prime reading-ல் என்ன வாசிக்கலாம்? 🤔

பெங்களூரு இலக்கிய திருவிழா
பெங்களூரு இலக்கிய திருவிழாவிற்கு நேற்று செல்ல இயலவில்லை. இரு பெரும் தமிழ் எழுத்தாளர்கள் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள இருந்ததால், இன்று செல்லாமல் இருக்க முடியவில்லை. சாரு நிவேதிதாவின் நிகழ்ச்சிக்கு, சரியாக ஆஜராகி விட்டேன். அரை மணி நேரம் போனதே தெரியவில்லை; இருந்த நேரத்தில் சாருவை கொஞ்சம் அதிகமாக பேச விட்டிருக்கலாம். நான் தான் ஔரங்கசீப் நாவலை அங்கேயே வாங்கி கையோடு சாருவின் கையொப்பத்தையும் வாங்கி கொண்டேன். மகளையும் அழைத்துச் சென்று இருந்ததால் குழந்தைகள் பிரிவிலும் சற்று நேரம் ஒதுங்க வேண்டி இருந்தது. ஜெயமோகனின் ஏழாம் உலகம் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பற்றிய அமர்வில், ஏழாம் உலகத்தையும் தாண்டி அவரது பிற நூல்களைப் பற்றிய கேள்விகள் கேட்கப் படாமல் இருந்திருக்கலாம். நான் வாங்கிய எல்லா புத்தகங்களிலும் ஆசிரியர்களின் கையெழுத்தை வாங்கிக் கொண்டேன். மகிழ்ச்சி! இன்று வாங்கிய புத்தகங்கள்:-
- நான் தான் ஔரங்கசீப் – சாரு நிவேதிதா
- Gopis Day Out – Sudha Murthy
- Becoming Bangalore – Roopa Pai
