பள்ளம் மேடுகளால் நிரப்பப்பட்ட மாநில நெடுஞ்சாலையில் 20 Kmphல் பேருந்தின் கம்பிகள் நடுநடுங்க சென்று கொண்டிருந்தது தாழ் தள “சொகுசு” பேருந்து. அந்த பேருந்தில், ஒழுங்காக வேலை பார்த்தது, FM ரேடியோ மட்டும் தான். யாரும் அதை கவனித்ததாக தெரியவில்லை. அந்த பேருந்துக்கு அப்படி ஒரு பெயரை வைத்தவர் யாராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே, வழியில் வாங்கிய வேர்கடலையை விழுங்கி கொண்டிருந்தார், நம்ம ஹீரோ, மைனர் X . சரி, கிழக்கே இருக்கும் நிலங்கள் எல்லாம் இன்னும் செழிப்பாக இருக்கின்றனவா என்று. இந்த வருடம் அமோக விளைச்சல் இருக்கும் என தெரிந்தது. நினைக்க நினைக்க அவ்வளவு சந்தோசம் மைனருக்கு. அவர் நிலமானு கேட்குறிங்களா ? அப்படி எல்லாம் இல்லை. அந்த நிலங்கள் செழிப்பாக இருக்கும் போதே 4 இல்ல 5 ஏக்கர் வாங்கிடவேண்டும் என்ற மேன்மையான எண்ணம் மட்டுமே அவருடையது. 21 வயது வரை நல்ல வேளை கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே புரிந்தோ புரியாமலோ படிக்க சொன்னது எல்லாவற்றையும் படித்து , வேலையில் சேர்ந்து, இப்பொழுது வாழ்வதற்கு ஒரு வீடும், வாடகைக்கு விட நாலு வீடும் வாங்க துடிப்பவர். விவசாய நிலங்கள் இப்படி சதுர செவ்வக கட்டிடமாக மாறுவதை கண்டு Facebook மற்றும் வலைபதிவில் அவ்வப்போது நினைத்து கண்ணீர் விடுபவர். போலீஸ் இல்லாத நேரங்களில் மட்டும் டிராபிக் விளக்குகளை மதிக்காத அண்ணா ஹசாரேவின் தீவிர தொண்டர். தமிழ் பெண்கள் தான் உலகத்தில் அழகு என்று மார் தட்டிக்கொள்ளும் தமன்னாவின் ரசிகர். மொத்தத்தில் ஒரு சராசரி தமிழ் இளைஞன். தினம் பார்க்கும் மனிதர்களின்(என்னையும் சேர்த்து தான்) கூட்டுகலவையே மைனர் X .
சரி கதைக்கு வருவோம். வேர்கடலை காலி ஆகியிருந்தது. தூரத்தில், மைனர் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் டீ கடை தெரிந்தது. சட்டைக்குள் இருந்த தங்க சங்கிலியை எடுத்து வெளியில் போட்டுக் கொண்டார். பையில் இருந்த கூலிங் கிளாசை எடுத்து சட்டையில் மாட்டிக் கொண்டார். பேருந்து நின்று ஒரீரு நிமிடங்கள் தாமதித்து வெகு கோவமாக இறங்கினார் மைனர். பேருந்து நடத்துனர், முதலில் சில்லறை கொடுக்கவில்லை, டிக்கெட்டின் பின் எழுதிக் கொடுத்திருந்தார் இப்பொழுது சில்லரை கொடுக்கும் பொழுது, டிக்கெட்யை வாங்கியவர் சில்லரை கொடுத்தார், டிக்கெட்யை திரும்ப தரவில்லை. அதற்கு பதில் அதிகமாக இரண்டு ரூபாய் கொடுத்திருந்தார். மைனர் தான் அண்ணா ஹசாரே தொண்டர் ஆச்சே. விடுவாரா, சண்டை போட்டு, மேலும் இரண்டு ரூபாய் வாங்கிய பின்னரே இறங்கினார். 50-50 இல்லாவிட்டாலும் 70-30யாவது இருக்கவேண்டும் என்பது மைனரின் குறிக்கோள்.
மைனரின் கார் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அவர் வீட்டில், ஒரு கார், ஒரு பைக், ஒரு TVS 50 மற்றும் ஒரு சைக்கிள் இருந்தன. அனால் ஓட்டுவதற்கு தான் ஆள் இல்லை. ஆள் இல்லாவிட்டால் என்ன, அந்தஸ்துநு ஒன்னு இருக்குல. வீட்டில் நாட்டு கோழி வெந்து கொண்டிருந்தது. மைனர் வெளியில் அசைவம் சாப்பிடுவது இல்லை. ப்ராய்லர் கோழி உடம்புக்கு கேடாம். எவ்வளவு காசு கொடுத்தாலும், மட்டனில் மாட்டு கரி கலந்து விடுகிறார்களாம். பாக்கெட்டில் பதிலை வைத்துக் கொண்டே சுத்துபவர் மைனர் X. அடுத்தா மூன்று நாட்கள் ஊரில் தான்.
திங்கள் இரவு, மூன்று நாள் போனதே தெரியவில்லை. ஊரில் இருந்து திரும்பி கொண்டிருந்தார் மைனர். அதே ஓட்டை பேருந்தில். மைனர் மிகவும் மாறி போயிருந்தார். மூணு நாள்ல, என்ன மாற்றம் இருக்க முடியும் ? இருந்தன. போகும் பொழுது யாரோ ஒருவருடைய நிலமாக இருந்த அந்த வயல், இன்று அவருடையதாகியிருந்தது. பசித்தது. கூட்டம் அதிகம் இல்லாததால், இரவுக்கு பார்சல் செய்த உணவில் பாதி உண்ணலாம் என நினைத்து டிபன் பாக்ஸ்ஐ திறந்து பார்த்தார். வழக்கத்திற்கு மாறாக இருந்தது. எப்பொழுதும், மீன் குழம்பு இருக்கும். இன்று சப்பாத்தி இருந்தது. இங்கு இவர், விளை நிலங்களை வெறும் நிலங்களாக மாற்றி கொண்டிருந்த நேரத்தில், ஒரு அரசியல் வாதி, ஊருக்கு அருகில் இருந்த குளத்தை நிரப்பி, மனைகளாக மாற்றி கொண்டிருந்தான். பின்னணியில் FM ரேடியோவில் தலைவர் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. “மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணிற்கு ஆசை. மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம் தான் உணர மறுக்கிறது”. யாரும் அதை கவனித்ததாக தெரியவில்லை.